உனக்கென இருப்பேன். உயிரையும் கொடுப்பேன்.


உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, கண்மணியே!
அழுவதேன்?… கண்மணியே!
வழித்துணை நான் இருக்க…

கண்ணீர் துளிகளைக், கண்கள் தாங்கும் – கண்மணி
காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் – என்றுதான்
வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சாரக் கம்பிகள் மீதும்,
மைனாக்கள் கூடு கட்டும்,
நம் காதல் தடைகளைத் தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை,
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி,
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்!

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் – தோழியே!
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது – எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீர் குளிக்க,
விறகாகித் தீக் குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.
விழி மூடும் போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆனேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

– நா.முத்துக்குமார்

Leave a comment