▶ Jakkamma – 1972 | Tamil Full Movie – Y

▶ Jakkamma – 1972 | Tamil Full Movie – YouTube http://ow.ly/qcAdZ

Advertisements

▶ Super Singer – Diwakar sings Maanoothu

▶ Super Singer – Diwakar sings Maanoothu Mandhayila – YouTube http://ow.ly/q2Ia5

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்

நடிகர்கள்: சத்யராஜ், மணிவண்ணன், சீமான், கோமல் சர்மா, வர்ஷா, மிருதுளா, அன்ஷிபா, ரகுவண்ணன்

ஒளிப்பதிவு: டி சங்கர்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பிஆர்ஓ: ஜான்

தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்

எழுத்து- இயக்கம்: மணிவண்ணன்

இந்த நாடும் அரசியலும் நாட்டு மக்களும் நாளாக நாளாக எத்தனை மோசமான கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எள்ளலாகச் சொல்ல மணிவண்ணனைத் தவிர வேறு இயக்குநர்கள் இருக்கிறார்களா… சந்தேகம்தான்!

19 ஆண்டுகளுக்கு முன் அன்றைய அரசியலை அடித்துத் துவைத்து தொங்கவிட்டார் அமைதிப்படை மூலம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் இன்றைய அரசியலைக் கையிலெடுத்துள்ளார்.

 

nagaraja cholan ma mla review

வாரிசு அரசியல், கூட்டணி பேரங்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, சட்டசபையில் நாக்கை மடக்கி மிரட்டுவது, அரசியலை முழு வியாபாரமாக மாற்றும் ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நசுக்கப்படுவது, இயற்கை வளங்களை ஏகபோகமாக கொள்ளையடிப்பது என இன்றை நடப்புகளைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன்.

 

தேங்காய்ப் பொறுக்கி அமாவாசையாக இருந்து, எம்எல்ஏவாக உயர்ந்து, துணை முதல்வராக அதிகாரத்தைப் பிடிக்கும் நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ (சத்யராஜ்), வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதிவாசிகள் குடியிருக்கும் ஒரு பெரிய காட்டையே விற்க முயற்சிக்கிறார். அதற்கு தடையாக வரும் அத்தனை அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுகிறார். சொந்த மருமகளே எதிராகக் கிளம்ப அவரையும் தீர்த்துக் கட்டத் துணிகிறார்.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தப் பேரையும் விலைக்கு வாங்கி, முதல்வரை மிரட்டி, அந்த நாற்காலியையும் பிடித்துவிடுகிறார். முதல்வர் நாகராஜசோழனுக்கு எதிராகவும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் போராட்டம் வெடிக்கிறது. ஆனால் அதனை நசுக்குகிறது நாகராஜசோழன் அரசு. வேறு வழியின்றி போராட்டத்தை மவுனிக்கச் செய்துவிட்டு தலைமறைவாகிறது சீமான் குழு.

நாகராஜ சோழனை கைது செய்ய தீவிர முயற்சி எடுக்கிறது சிபிஐ. உடனே மாநிலம் முழுக்க கலவரமும் வன்முறையும் வெடிக்கிறது. நாகராஜ சோழன் கைதாகிறாரா? அவரது கேடு கெட்ட அரசியல் முடிவுக்கு வருகிறதா என்பது க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லோருமே இதன் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அது தேவையற்றது. காரணம் இரண்டுமே கிட்டத்தட்ட வேறு வேறு படங்கள் மாதிரிதான்.

இன்றைக்கு உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக அவலங்களை வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த அளவு துணிவாக அத்தனை அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கும் துணிவு எந்த இயக்குநருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து மக்கள் திருந்திவிடுவார்கள் என்றும் மணிவண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், ‘நாட்டு நடப்பு இதானப்பா… இன்றைய அரசியல் திருட்டுத்தனங்களைத் தெரிஞ்சிக்கங்க.. நீங்க சிரிச்சிட்டுப் போனாலும் சரி, சிந்திக்காம போனாலும் சரி…,’ என்ற தொனிதான் படம் முழுக்க தெரிகிறது!

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலும், அது மணிவண்ணன்தான். சத்யராஜை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்கிறார். வசனங்களை அவர் பிரயோகிக்கும் விதம், சூழல், காட்சி எல்லாமே… மணிவண்ணன் என்ற நல்ல எழுத்தாளரை முன்நிறுத்துகிறது.

ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது.

சாம்பிளுக்கு சில:

சத்யராஜ்: என்ன மணியா… எழவெடுத்த தேர்தல் வருது… ஜெயிச்சி தொலைக்கணும்… என்ன பண்ணலாம்?

மணிவண்ணன்: மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா… கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா… டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா… ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு இலவச ஜெனரேட்டர் திட்டம்..!

**
எதிர்கட்சித்தலைவர்: என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்..

சத்யராஜ்: அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில நாக்கை மடிச்சி ‘ஏய்’ ன்னு சவுண்டு குடுக்கற!

**

சீமான்: மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும்…. மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாறதான் இருக்கும்
ஜெகன்: அப்போ பாறதான் மிஞ்சுமா
சீமான்: அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன்: அப்போ, வெறும் தரதான் மிஞ்சுமா
சீமான்: அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறானுங்களே
**
சத்யராஜ்: அப்பனும் மகனும் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சது அந்தக் காலம்… புருசனும் பொண்டாட்டியும் கட்சி ஆரம்பிப்பது இந்தக் காலம்…
**
சத்யராஜ்: என்ன மணியா… யாரு இவ…

மணி: அட நம்ம பொள்ளாச்சி சரசுங்ணா… நாங்க கும்கின்னு கூப்புடுவோம்…

சத்யராஜ்: அதென்னய்யா கும்கி…

மணி: அது.. இந்த பெரிய யானைங்க, பழகாத முரட்டு யானைங்களை பழக்கி அனுப்பி வைக்கும்ல… அதானுங்ணா…
**
சத்யராஜுக்கு இரு வேடங்கள். அதில் அரசியல்வாதி நாகராஜசோழன் பின்னி எடுக்கிறார். நியாயமாக இந்த கேரக்டர் மீது கோபம் வரவேண்டும். ஆனால் சத்யராஜ் – மணிவண்ணன் லொள்ளு அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்துவிடுகிறது.

சிபிஐ அதிகாரியாகவும் சத்யராஜையே போட்டிருக்கின்றனர். அவ்வளவு நடிகர் பஞ்சமா… அல்லது பட்ஜெட்டா என்ற கேள்வி எழாமலில்லை.

மணிவண்ணனும் சத்யராஜுமே பிரதானமாய் நிற்பதால் மற்ற நடிகர்கள் பெரிதாக எடுபடவில்லை. அவர்கள் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

மலைவாழ் மக்களின் மண்ணுரிமையைக் காக்கும் தலைவனாக வருகிறார் சீமான். மக்களை போராடத் தயார்ப்படுத்தும் அவரது பேச்சுகளும், குறிப்பாக போரை மவுனிக்க அவர் சொல்லும் காரணங்களும் ஈழத்து சூழலை நினைவூட்டியது.

ரகுவண்ணன் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். அமைதிப்படை மூன்றாம் பாகத்துக்கு ரகுவண்ணனைத் தயார்படுத்துவது காட்சியை அமைத்திருக்கிறார் மணிவண்ணன்.

படத்தின் முக்கிய ப்ளஸ் டி சங்கரின் ஒளிப்பதிவு. அரசியல் பரபரப்பையும் வனாந்திரத்தில் நடக்கும் போரையும் அவர் கேமரா அத்தனை அர்த்தங்களுடன் பதிவு செய்துள்ளது.

படத்தின் முக்கிய குறை ஜேம்ஸ் வசந்தனின் இசை. அதை மன்னிப்பதற்கில்லை. இந்த மாதிரி படத்துக்கு என்ன மாதிரி இசை அமைக்க வேண்டும் என்பதை அவர் அமைதிப்படை முதல் பாகத்தைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதல் பாகத்திலிருந்து ஒரு காட்சியை க்ளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் படத்தில் சேர்ந்திருப்பார் மணிவண்ணன். அதில் ஒலிக்கும் இசைக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள்தான் ஜேம்ஸ் வசந்தன்களுக்கான உண்மையான விமர்சனம்!

நாகராஜசோழன் நிரந்தரமாக சிறைக்குப் போனதை மணிவண்ணன் கொண்டாடும் விதமிருக்கே… அதுதான் ‘அக்மார்க் மணிவண்ணன்’ குறும்பு!

அரசியல் எள்ளலை அர்த்தத்துடன் ரசிக்க நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ பாருங்க!

நேரம்

நடிகர்கள்: நிவின், நஸ்ரியா நஸீம், தம்பி ராமையா, நாசர், ஜான் விஜய்
இசை: ராஜேஷ் முருகேசன்
காமிரா: ஆனந்த் சந்திரன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: கோரல் விஸ்வநாதன்
வெளியீடு: ரெட்ஜெயன்ட் மூவீஸ்
எழுத்து – எடிட்டிங் – இயக்கம்: அல்போன்ஸ் புத்ரன்

முன்பெல்லாம் ஒவ்வொரு படத்தின் பிரஸ்மீட் அல்லது பாடல் வெளியீட்டின் போதும் அந்தப் பட இயக்குநர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை வித்தியாசம். ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அப்படி ஏதாவது இருந்ததா என யோசிக்க வேண்டியிருக்கும். பெரிய ஹீரோ, டாப் இயக்குநர் படங்களே கூட இதற்கு விலக்கில்லை.

ஆனால் இப்போது அந்த வித்தியாசம் பிடிபட ஆரம்பித்துள்ளது. காரணம் புதிய களம், புதிய காட்சியமைப்புகளை மனதில் பதித்து, அதை அப்படியே பிடிவாதமாக திரையில் வார்த்தெடுக்கும் அபார கற்பனை வளத்துடன் வரும் புதிய இயக்குநர்கள்.

அந்தப் பட்டியலில் மிக சமீபமாக இடம்பிடித்துள்ளவர் அல்போன்ஸ் புத்திரன். இவரது படைப்பு – நேரம்!

 

 

நல்லதோ கெட்டதோ… எது நடந்தாலும் நாம் பழியைத் தூக்கிப் போடுவது… நேரத்தின் மீதுதான். நக்கலடிக்கக் கூட ‘எல்லாம் நேரம்’ என்ற பதத்தையே பிரயோகிக்கிறோம்.

ஆனால் இந்த நேரம் எப்போ நல்லாருக்கு… எப்போ டல்லாருக்கு.. எப்போ மோசமாயிருக்கு? – இந்த கேள்விக்கு விடை காணத்தால் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் ஜோசியருக்கு அழுகிறார்கள்.

ஆனால் அல்போன்ஸ் புத்ரன் எளிமையாக ஒரு கணக்கு சொல்கிறார்… அண்ணாமலை ரஜினி மாதிரி!

ஒருத்தனுக்கு நல்ல விஷயங்களே தொடர்ந்து நடந்தால் அது நல்ல நேரம்… கெட்டவைகள் தொடர்ந்தால் அது கெட்ட நேரம். இதைப் புரிந்து கொள்ள ஜோசியம் தேவையில்லை.. வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் போதும் என்கிறது படம்!

அமெரிக்காவில் தேள்கொட்டியதால் இளைஞன் வெற்றிக்கு சென்னையில் நெறி கட்டுகிறது. வேறொன்றுமில்லை.. அங்கு நடக்கும் குண்டு வெடிப்பால் சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் வெற்றி திடீரென வேலையை இழக்கிறான்.

தங்கையின் திருமணம்… வட்டி ராஜாவிடம் போய் கடன் வாங்குகிறான். அதே நேரத்தில் வெற்றியின் காதலி வேணி ஒரு நிர்ப்பந்தத்தில் அவனுடன் வாழ வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வழியில் அவள் தன் தங்கச் சங்கிலியைப் பறிகொடுக்க, இங்கே ஹீரோ தான் வட்டிக்கு வாங்கிய பணத்தைப் பறி கொடுக்க… சோதனை மேல் சோதனை. இந்த கெட்ட நேரத்திலிருந்து அதே நாளில் எப்படி மீள்கிறான் ஹீரோ… எப்படி நல்ல நேரம் ஆரம்பிக்கிறது என்பதை மகா சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்.

ஒரு படத்தின் பாத்திரத் தேர்வு மட்டும் சரியாக அமைந்தாலே பாதி வெற்றி கிடைத்த மாதிரிதான் என்பார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ். அதை இந்தப் படம் மெய்ப்பித்திருக்கிறது.

ஹீரோவாக வரும் நிவின், ஹீரோயின் நஸ்ரியா நஸீம் இருவருக்குமே இது முதல் படம். ஆனால் அத்தனை அம்சமாக இருக்கிறார்கள். நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, அந்த வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, ஹீரோயின் அப்பா தம்பி ராமையா, எஸ்ஐயாக வரும் ஜான் விஜய், நாசர் உள்ளிட்ட அத்தனை பாத்திரங்களும் மிக இயல்பாக இந்தக் கதையில் பொருந்திப் போகிறார்கள்.

இயக்குநர் மலையாளி என்பதால் இந்தப் படத்தை மலையாளத்திலும் விட்டிருக்கிறார்கள். கதையும் எடுக்கப்பட்ட விதமும் நன்றாக இருந்தால் எந்த மொழியிலும் ரசிப்பார்கள் என்பது நேரம் தரும் பாடம்.

முதல் பாதியில் நேரத்தைக் கொல்ல வேண்டியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஒரே குறை. இன்னொன்று.. குறையென்று சொல்ல முடியாது… இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என சொல்ல வைப்பது இசை.

படத்தின் இயக்குநர்தான் எடிட்டர். இரண்டாம் பாதியில் கொடுத்த வேகத்தை, முதல் பாதியிலிருந்தே தொடர்ந்திருக்கலாம்.

ஆனந்த் சந்திரன் காமிரா படத்துக்கு இன்னொரு சிறப்பு:

தமிழ் சினிமாவின் காலை அவ்வப்போது சிலர் குழிக்குள் இழுக்கப் பார்த்தாலும்… இதோ நாங்கள் இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு கெத்தாக முன் நிற்கிறார்கள் அல்போன்ஸ் புத்ரன் மாதிரி இயக்குநர்கள். ரியல் ஹீரோக்கள் இவர்கள்தான். வாழ்த்துகள்!

தில்லு முல்லு – விமர்சனம்

நடிப்பு: சிவா, பிரகாஷ் ராஜ், கோவை சரளா, இஷா தல்வார், சந்தானம், சூரி

இசை: எம்எஸ் விஸ்வநாதன் – யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: லக்ஷ்மண்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: வேந்தர் மூவீஸ்

இயக்கம்: பத்ரி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான, இன்றும் வாரத்துக்கு ஒருமுறையாவது தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தில்லுமுல்லு படத்தை, மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

என்னதான் தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றம் என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரிஜினல் தில்லுமுல்லுவையும் இந்த ரீமேக்கையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.

அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால்… ஒரிஜினலுக்கு முன் இந்த ரீமேக் ஜூஜுபி!

அதே கதைதான்… திரைக்கதையில் மட்டும் இன்றைய சூழலுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

 

thillu mullu review

 

ஒரிஜினல் தில்லுமுல்லுவில் மீசையை வைத்து ஆள்மாறாட்டம் செய்வதாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் சாதாரண கண் பசுபதி, பூனைக் கண் கங்குலி கந்தன் என ஆள்மாறாட்டம் செய்கிறார் சிவா.

கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வசனத்தை ஒப்பிக்கிறார் சிவா. இதையே நடிப்பு என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும். ராகங்கள் பதினாறு பாடலில் சிவாவின் உடல் மொழியும் பாவங்களும்… ரொம்ப்ப பாவம்! ‘தமிழ்சினிமா’வை ஒரு முறைதான் ரசிக்க முடியும். நடிக்கிற எல்லா படமும் ‘தமிழ்சினிமா’வாகவே இருந்தால், உங்களை நீங்களே ஸ்பூஃப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

தேங்காய் சீனிவாசன் பின்னியெடுத்த அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தில் பிரகாஷ் ராஜ். சிவகுருநாதன் எனும் முருகபக்தராக, எதையும் சீக்கிரம் நம்புகிற அல்லது சந்தேகப்படுவராக வருகிறார். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர், திறமையாளர் இத்தனை மாங்காவாகவா இருப்பார்… ஆனால் ஒரிஜினலில் இப்படிக் கேட்க முடியாத அளவுக்கு தேங்காய் சீனிவாசன் பாத்திரமும் நிகழ்வுகளும் பின்னப்பட்டிருக்கும்.

சௌகார் நடித்த ஆள்மாறாட்ட அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரு முறை இரு முறை என்றால் கூட பரவாயில்லை. கோயிலில், நிச்சயதார்த்தத்தின்போது, சாதாரணமாக வீட்டிலிருக்கும்போது என எப்போதும் நாக்கில் வேலோடு கோவை சரளா. முடியல!

படத்தின் பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். ஏதோ மும்பை எக்ஸ்ட்ரா மாதிரி தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு….? வீசை என்ன விலை!!

நண்பன் கூடவே இருந்து அவன் தங்கையை கரெக்ட் பண்ணுபவராக வருகிறார் பரோட்டா சூரி. ரொம்ப ஸாரி… இந்த முறை உங்கள் ஷோ எடுபடவில்லை!

பாத்திரங்கள், அதற்கான தேர்வுகளில் இயக்குநர் கோட்டைவிட்டாலும், வசனங்கள் அவருக்குக் கைகொடுக்கின்றன. சின்னச் சின்ன டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

 

thillu mullu review

 

க்ளைமாக்ஸை முழுசாக மாற்றியிருக்கிறார்கள். குன்றத்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கல்யாண காட்சியும் அதில் நடக்கும் சுவாரஸ்ய ஆள்மாறாட்டங்களும் சுந்தர் சி பட எஃபெக்டைத் தருகின்றன. இந்த க்ளைமாக்ஸ் மொத்தத்தையுமே சந்தானத்திடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

லக்ஷ்மனின் ஒளிப்பதிவில் விசேஷம் ஒன்றுமில்லை. துபாய் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் விளையாடுவதால், ஒளிப்பதிவாளர் காணாமல் போகிறார்.

எம்எஸ்வி – யுவன் இசைக் கூட்டணியில், அந்த டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு… பாடலை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். கார்த்திக் குரலை மட்டுமல்ல, மொத்த பாட்டையுமே கூட ரசிக்க முடியவில்லை. ஏதோ கோயிலில் கச்சேரி கேட்ட உணர்வு!

ஒரிஜினல் தில்லுமுல்லு ஒரு காமெடிப் படம் என்றாலும், அத்தனைக் காட்சிகளிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் ஸ்டைலும் அழகுணர்வும் மனதை ஆளும் இசையும்… அனைத்துக்கும் மேல் ரஜினியின் சுவாரஸ்ய நடிப்பும் இருந்தது. அதெல்லாம் இந்த ரீமேக்கில் இல்லை. ஒருவேளை இதெல்லாம் இல்லாமலிருப்பதுதான் இந்தத் தலைமுறை பாணி என நினைத்துக் கொண்டார்களோ!

ரஜினியின் தில்லுமுல்லு படத்தை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால்… ரசிக்கலாம்!

தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

நடிகர்கள்: சித்தார்த், சந்தானம், ஹன்சிகா, கணேஷ் வெங்கட்ராம்

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

இசை: சத்யா

பிஆர்ஓ : ஜான்சன்

தயாரிப்பு: யுடிவி

இயக்கம்: சுந்தர் சி

வழக்கமான காமெடி ப்ளஸ் ரொமான்டிக் கதையை புத்தம் புது ஹைடெக் பாலீஷில் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படம் மூலமாக.

சும்மா சொல்லக்கூடாது.. முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை அந்த கலகலப்பு குறையாமல், எந்தக் காட்சியிலும் எழுந்து போகவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் (பாடல் காட்சியில் கூட ஹன்சிகாவுக்காக அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார்கள் மக்கள்… ரசிகன்டா!).

 

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

 

ஐடி எஞ்ஜினீயர் சித்தார்த்துக்கு கூட வேலை பார்க்கும் ஹன்சிகா மீது காதல். ஆனால் அதை சொல்லத் தயங்கி, ஐடியா மணியான சந்தானத்திடம் (பேரு மோக்கியா!) போகிறார். அந்த ஐடியாவை ஒர்க் அவுட் பண்ணப் பார்க்கும்போது, கணேஷ் ஹன்சிகாவை உஷார் பண்ணப் பார்க்கிறார். கணேஷ் – ஹன்சிகா காதலிக்காமலிருக்க கொஞ்சம் கிக்கிரி பிக்கிரி வேலை பார்க்கிறார்கள் சந்தானமும் சித்தார்த்தும். விளைவு… ஹன்சிகாவுடன் காதல் ஒர்க் அவுட் ஆகிறது சித்தார்த்துக்கு. அப்புறம்தான் தெரிகிறது சந்தானத்தின் தங்கைதான் ஹன்சிகா என்பது. இப்போது ஹன்சிகா – சித்தார்தைப் பிரிக்க சந்தானம் ஏகப்பட்ட திட்டம் போடுகிறார். அதைத் தாண்டி இருவரும் சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்!

ஐடி இளைஞன் வேடம் முற்றிப் போன சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அவரும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு என்னென்னமோ செய்கிறார். ஆனால் அவ்வளவாக எடுபடவில்லை. சந்தானம் வந்தால்தான் சித்தார்த் காட்சிகளை ரசிக்க முடிகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

படத்தின் ஹீரோ கிட்டத்தட்ட சந்தானம்தான். ஆனால் அவரது கேரக்டர் அப்படியா மைடியர் மார்த்தாண்டனில் வரும் கவுண்டமணியின் Extended Role! என்ன.. அதில் ஒரு ஐடியாவுக்கு கட்டுக்கட்டாக காசு வாங்குவார் கவுண்டர்… சந்தானம் இதில் க்ரெடிட் கார்ட் தேய்க்கச் சொல்கிறார். ஆயிரம் சொல்லுங்க.. ஒரிஜினல் ஒரிஜினல்தான்!

ஹன்சிகாவை இதுவரை யாரும் இப்படி செக்ஸியாக எக்ஸ்போஸ் பண்ணதில்லை என்று சொல்ல வைத்திருக்கிறார் சுந்தர் சி.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு நிஜமாகவே கண்களுக்கு இதம். அட, சுந்தர் சி படமாய்யா இது என்று கேட்க வைக்கின்றன பல ஷாட்கள்!

சத்யாவின் இசையில் எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை.

படத்தின் பெரும் பலம் வசனங்கள். ஒரு கூட்டணியே இதற்காக தீயாய் வேலை செய்திருக்கிறது. நொடிக்கொரு சரவெடியாய் சிரிப்பை அள்ளுகின்றன.

சிரிப்பு சினிமாவோ.. சீரியஸ் சினிமாவோ… காலம், ரசனை மாற மாற, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது படைப்பாளிக்கு முக்கியம். அதை நன்றாக உணர்ந்திருப்பவர் இயக்குநர் சுந்தர் சி.

படத்தில் குறைகள் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்காமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்… அதுதான் இந்தப் படத்தின் வெற்றி!

அன்னக்கொடி – விமர்சனம்

நடிப்பு: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம்: பாரதிராஜா

தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட படைப்பாளி, ஸ்டுடியோக்களுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர், மண்ணின் கலைகளை – உணர்வுகளை செல்லுலாய்டில் செதுக்கியவர்… என எத்தனையோ பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பாரதிராஜா 5 ஆண்டுகள் கழித்து உருவாக்கியிருக்கும் படம் என்ற முத்திரையோடு வந்திருக்கிறது அன்னக்கொடி.

ஆனால்… இத்தனைப் பெருமைக்குரியவர் தந்திருக்கும் படம்… பார்க்கும்படி இருக்கிறதா…? பார்க்கலாம் வாங்க!

 

அன்னக்கொடி- விமர்சனம்

 

சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்)… ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல் பூக்கிறது.

ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரையே வளைத்து வைத்திருக்கிற சடையனின் (மனோஜ்) காமப் பார்வைக்குள் சிக்குகிறாள் அன்னக்கொடி. அந்த நேரத்தில் அன்னக்கொடியை பெண்கேட்டு அப்பனோடு வருகிறான் கொடிவீரன்.

தாழ்ந்த சாதிக்காரன் எப்படி பெண் கேட்கலாம் என அவர்களை அடித்து உதைத்து சாணியைக் கரைத்து ஊற்றி அசிங்கப்படுத்தி அனுப்புகிறாள் அன்னக்கொடியின் தாய். விஷயமறிந்த சடையன் தன் அடிமையான போலீசுக்கு சொல்லி கொடிவீரனை சிறையில் தள்ளுகிறான்.

ஒரு நாள் அன்னக்கொடியின் தாய் செத்துப் போக, அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக அன்னக்கொடியை தன் வசமாக்கிக் கொள்கிறான் சடையன்.

சடையனுக்கு மனைவியாக அன்னக்கொடி வாழ்ந்தாளா? கொடிவீரன் காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் ரத்தக்களறியாக சொல்லி முடிக்கிறார் க்ளைமாக்ஸில்.

பாரதிராஜாவின் கிராமத்துக் கதைகள் பெரும்பாலும் சோடைபோகாதவை. விலக்காக முதல் சொதப்பல் ஈரநிலம்… அந்தப் பட்டியலில் இப்போது அன்னக்கொடி!

 

அன்னக்கொடி- விமர்சனம்

 

ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன. பாரதிராஜாவின் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, அழகியலோ, வசனங்களோ, நுட்பமான நளினங்களோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட இல்லை.

ஒரு சாம்பிள்… நாடோடித் தென்றலில் சோத்துக்கு தொட்டுக் கொள்ள ரஞ்சிதாவின் கைவிரல்களை பயன்படுத்தியபோது நம்மால் ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தப் படத்தில் கார்த்திகாவின் அல்லது லட்சுமணனின் நகங்களைக் கடித்து அதை கஞ்சிக்கு தொட்டுக் கொள்வதாகக் காட்டியிருப்பது குமட்டலைத்தான் தருகிறது!

அதேபோல ஏற்கெனவே பாரதிராஜாவின் படங்களில் பார்த்த நிறைய காட்சிகளை இந்தப் படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. அன்னக்கொடியின் தாய் இறந்துபோனது தெரிந்ததும், காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான் கொடிவீரன்… அப்போது கல்யாணமாகி புருஷனுடன் மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருப்பாள் அன்னக்கொடி. இதை வேதம் புதிதிலேயே கொஞ்சம் வேறு மாதிரி காட்டியிருப்பார்.

 

அன்னக்கொடி- விமர்சனம்

 

ஒரு நா ஒரு பொழுது, சிறுக்கி மவ, அல்லைல குத்து… இதுபோன்ற ஒரு டஜன் வார்த்தைகள் திரும்பத் திரும்ப படம் முழுக்க வந்து பெரிய அலுப்பைத் தருகின்றன. வசனங்களில் ஆபாசம், அருவருப்புக்கும் பஞ்சமில்லை.

சடையனுக்கு தந்தையாக வரும் (இயக்குனர்) மனோஜ்குமார் தன் மருமகளையே மடக்கப் பார்க்கும் காட்சிகளும் வசனங்களும் இது பாரதிராஜாவின் படமா.. மாமனாரின் இன்பவெறி மாதிரி கில்மா படமா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் சேலை ரவிக்கை என டீஸன்டாக நடமாட, இளம் பெண்களான கார்த்திகாவும், ‘லோக்கல் வெடக்கோழி’ மீனாளும் மட்டும் ரவிக்கையில்லாமல் அலைவது ஏன் என்பது பாரதிராஜாவுக்கே வெளிச்சம். ஒரு காட்சியில் காட்சியில் கிட்டத்தட்ட முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமான நிர்வாணத்தோடு கார்த்திகாவை ஓடவைத்திருக்கிறார் பாரதிராஜா. அவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்பட்டிருக்கிறது!

மகனுக்கு நல்ல வாய்ப்பை உண்டாக்கித் தர ஒரு தந்தை விரும்புவது நியாயம்தான். ஆனால் அதற்காக இப்படியா… மனோஜ் இல்லாத காட்சியென்று எதையும் எடுக்கவே அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் மனோஜ். இதில் அவருக்கு பஞ்ச் டயலாக்… பஞ்சர் பாட்டு என்று படுத்தி எடுக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் சாகும் விதமிருக்கே… பாரதிராஜா சார்… அந்தக் காட்சியைப் பார்த்து குதிரை மேலிருந்த அய்யனாரே குபுக்கென்று சிரித்திருப்பார்!

கதைப்படி மனோஜ், ‘அந்த விஷயத்துக்கு’ லாயக்கில்லாதவர். அப்புறம் அவரைக் காமுகனாகக் காட்டுவது, அயிட்டம் மீனாள் வீட்டுக்கு ரேட் பேசிவிட்டுப் போவது, அடுத்தவன் பெண்டாட்டியை தூக்கி வருவது, இன்னொருவனைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்தும் அன்னக் கொடியை அபகரிப்பது…. இதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா… இந்தக் கதைக்கு மனோஜின் கையாலாகாத்தன கேரக்டர், அதற்கான ப்ளாஷ்பேக், அவர் செய்யும் ஆறேழு கொலைகள் எந்த வகையிலாவது உதவியிருக்கின்றனவா… என்ன டைரக்டரே?

நடிகர்களின் பங்களிப்பு என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. லட்சுமணன் கொஞ்சம் முயன்றால் ஒரு நல்ல நடிகராக வர வாய்ப்பிருக்கிறது. முதல் படம் என்றாலும், முக பாவங்களைத் தெளிவாகக் காட்ட வருகிறது அவருக்கு. கார்த்திகாவை ஆடு மேய்க்கும் பெண்ணாக ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அவரது தோற்றம் அப்படி. குறிப்பாக அந்த புருவம்.. ரொம்ப ஓவர்!

 

அன்னக்கொடி- விமர்சனம்

 

மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த போலீஸ்காரர்… கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சாதி… இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல் ஜோடி… பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். இதை அவர் எந்த சமரசமும் இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும்.

ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது.

பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில், அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..!

%d bloggers like this: